
posted 13th April 2022
ஆரோக்கியத்தைப் பேண அவதானமாக செயல்படுங்கள்
அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல மருத்துவர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் கொரோனா நெருக்கடி ஏற்பட்டதுபோல, தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நிலையை கடந்து மீள்வதற்கு உள ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஒவ்வொருவரும் பேணவேண்டும். மதுபான, போதைப் பொருள் பாவனையை தவிர்த்து வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்து விபத்துகள் ஏற்படாதவாறு செயல்படுதல் சிறந்தது.
இளைஞர்கள் வன்முறையை தவிர்த்து தேவையற்ற பிரச்னைகளில் ஈடுபடாது இருப்பது ஆரோக்கியமானது. பொதுமக்கள் உணவுப்பழக்கங்களில் கவனம் வைத்து உள விருத்திச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
காணாமல் போன 27 வயதான கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டார்
நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் அனலைதீவு கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினருக்கு சொந்தமான படகுகள் நேற்று முன்தினம் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தன.
இதில் கடற்படை சிப்பாய் ஒருவர் காணாமல் போயிருந்தார். இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளையை சேர்ந்த சாகர பியந்த ஜயசேகர (வயது -27) என்பவராவார்.
விபத்தில் சிக்கிய 52 வயதானவர் மரணம்
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நுணாவில் கைதடியைச் சேர்ந்த சுப்பர் சுதாகர் (வயது- 52) என்பவராவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதடி பாலத்தடியிலிருந்து கைதடிப் பிள்ளையார் கோவிலை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இவ் விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
இடுப்பு நோவால் அவதிப்படுகிறீர்களா? உடன் நிவாரணி இதோ! >>>>>>>
